சாயங்காலம் – மாலை வேளை! (Evening Time)
நித்தமும் வந்து சென்ற வசந்த காலம்!
பள்ளி நாட்களில் பாய்ந்தோடி வீடு சென்ற வேளை
ஒவ்வொரு மாலையும் குதூகலமாய்!
வெறிச்சோடி கிடந்த வீதி – பிள்ளைகளின்
கரவொலியில் கலகலப்பாய்!
அன்றைய தின உழைப்புக்கு நன்றி சொல்லிடும்
மாலை வேளை உணர்த்திடும் சுதந்திரம்!
வீட்டில் முதியவரின் முகத்தில் பூரிப்பு
பறந்து சென்ற பறவைகள் கூடு தேடி வரும் வேளை அது!
தட்டில் முறுக்கும் பலகாரமுமாய்
குடும்பத்தோடு தேநீர் களித்த வேளை!
பண்பலையில் பவனிவரும் வானொலி
இதமான ராகங்களோடு!
தெருமுக்கு கடையில் – சலசலப்பு
சூடான போண்டா வடைக்கு!
மரங்களுக்குள் காதல் பரிணாமம்
ஒவ்வொன்றும் வெட்கத்தில் தலை அசைக்க
தொட்டும் தொடாமலும் நம்மை வருடிச் செல்லும்
இதமான இள மாலைக் காற்று!
மேகங்கள் மௌனமாய் அணிவகுக்க
சூரிய அஸ்தமனம் அரங்கேறும் வேளை!
மெல்ல மலர்ந்த முற்றத்து முல்லை!
அழகாய் கோர்க்கப்படும் வேளை!
நண்பர்களுடன் வீதி உலா – இளைஞர்கள்
தோள் சேர்த்து கரகோஷமாய்!
அதை கண்டும் காணாமலும்
குமரிக்கூட்டம் – ஜன்னல் ஓரமாய்!
கம்பீரமும் – காதலும் கலந்த வேளை அது!
முற்றத்தில் கோலம் இடல் – மங்கையருக்கு
ஆர்வமூட்டும் சாயங்கால சம்பிரதாயம்!
நிலவுடன் போட்டியோ – பெண்கள்
அலங்காரத்தோடு அம்சமாய்!
பறவைகள் அமர்க்களம் – இசையேற்றி
இனத்தோடு இணைகின்ற அந்திவேளை!
வீடுதிரும்பும் தாய்ப்பசு – துள்ளிகொண்டு கன்றுக்குட்டி
அன்பைப் பரிமாறிக்கொள்ளும் அந்திவேளை!
சுடர்விட்டு எறியும் தீபம் – ஆலய தரிசணம்
சாம்பிராணி, வாசனை பத்திகள் மனம் வீசிட!
ஒவ்வொன்றாய் ஏற்றப்படும் தெரு விளக்கு!
சிறுவன் குறும்பாய் அசைத்திடுவான் கண்ணை – ஆம்
அவன் கட்டளைக்கு கட்டுப்பட்டது கம்பம் என்று!
மெதுவாக நிலவும் வந்துசேரும் நிலாசோறுக்கு
அவ்வந்திப்பொழுதினை அழகு சேர்த்து!
ஒவ்வொரு நிகழ்வும் இன்றும் இனிமையாய்
இம்மாலை வேளைதனை மெருகேற்றுகின்றது!
காலச்சுழற்சி நம்மை இடப்பெயர்ச்சி செய்தபோதும்
இவ் அழகான மாலைப் பொழுதின் நினைவுகள்
தனிமையைக்கூடத் தோற்கடிக்கிறது!
கரங்களில் தேநீருடன் நினைவலையில் இதமாயிருக்கிறது
சாயங்காலம் – மாலை வேளை!
Krishna Priya, MD, KAP System Pvt Ltd
Other Tamil Kavithai:
பிற காணொளிகள் (Other Videos):
மாலை வேளை- Evening time :
இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
0 Comments