Distraction in Tamil - கவனச்சிதறல் | Tamil Thoughts

Distraction in Tamil – கவனச்சிதறல்


கவனச்சிதறலும் தேவைதான்

Distraction in Tamil:

இந்த கவனச்சிதறல் பற்றிய கட்டுரையை எங்களுக்கு அளித்தமைக்கு எழுத்தாளர் உஷா நாரணயணன் அவர்களுக்கு மிக்க நன்றி.

நம் கவனத்தை திசைதிருப்பக்கூடிய பலநூறு விஷயங்கள் நிறைந்துள்ள காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிலும், நவீன தொழில்நுட்பங்கள், மனிதனுடைய நினைவுத்திறனை அழித்து, மூளையின் செயல்பாட்டை பாதிப்பதோடு, உற்பத்தித்திறனை குறைப்பதில் பெரும் பங்காற்றி வருவதாக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உற்பத்தித்திறன் வல்லுனர்கள் என ஒரு கூட்டமே, நம்மிடம் உள்ள கவனக்குறைபாட்டை எச்சரித்து வருகிறார்கள்.

பெரும்பாலான ஆய்வறிக்கைகளும், தொழில்நுட்பங்களை திசைதிருப்பக்கூடிய ஒரு தொற்றுநோயாகவே சித்தரிக்கின்றன. கவனச்சிதறலுக்கு (Distraction), தொழில்நுட்பங்களை குற்றம்சாட்டுவது காலம் காலமாக நடந்துவரும் விஷயம்தான். இது ஒன்றும் புதிய விஷயமில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, பெற்றோர்கள் ரேடியோவையும், கதைப்புத்தகங்களையும் குறை சொன்னது போக, இப்போது, டி.வி, மொபைல் போன்களை குற்றம் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

Distraction in Tamil
Distraction-கவனச்சிதறல்

ஆனால், ‘கவனச்சிதறல்’ சில நேரங்களில் தேவைப்படும் ஒன்றாக இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். “கவனத்தை திசை திருப்புவதன் மூலம், செயல்திறன் மற்றும் பொறுமையை அதிகரிக்க முடியும்”. எடுத்துக்காட்டாக, “இசை கேட்டுக்கொண்டே உடற்பயிற்சி செய்யும்போது, கடினமாக உணராமல், மிகுந்த உற்சாகத்தோடும், கூடுதல் ஆற்றலோடும் ஈடுபட முடியும்.” என்கிறது ஓர் ஆய்வு.

“நகைச்சுவையான அல்லது முழு ஈடுபாட்டோடு செய்யும் நடவடிக்கைகள் உடலின் வலிகளைக் குறைக்கும் வழிமுறையாக இருக்கின்றன”. குறிப்பாக மனஅழுத்தத்திலிருந்து வெளிவர ஒரு ஆரோக்கியமான வழியாக இருப்பதால் ‘கவனச்சிதறல்’ ஒரு ஆழ்நிலை தியானத்திற்கு ஒப்பாக செயலாற்றுவதாக கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு சொல்கிறது.

Superbetter:

“Superbetter” என்னும் புத்தகத்தில் உளவியலாளரான டாக்டர் ஜேன் மெக்கோனிகல், “டிஜிட்டல் டெக்னாலஜி” (Digital Technology) தற்போது வலியிலிருந்து தற்காலிக விடுதலையைக் கொடுத்தாலும் கூட, எதிர்காலத்தில் நம்மை வலுவானவராக ஆக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது என விளக்கியுள்ளார். ‘சில தனிப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நம்முடைய பலவீனங்களை வென்று, எதிர்காலத்தில் பிரச்னைகளை சமாளிக்கும் ஆற்றலை எவ்வாறு வளர்த்த்துக்கொள்ளலாம்’ என்பதை இவரின் புத்தகம் விவரிக்கிறது.

‘கவனச்சிதறல்’ என்பது எதிர்மறையானதும் இல்லை, நேர்மறையானதும் இல்லை. எப்படி உங்களின் தனித்துவமான உற்பத்தித்திறனை பாதிக்காதவகையில், இரண்டுக்கும் இடைப்பட்ட சமநிலையில் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் நன்மையும், தீமையும் அமைகின்றன. நீங்கள் செய்யும் பணியின் தன்மை, பணிக்கு தேவைப்படும் கவனம், பணியின் சிக்கல் ஆகியவற்றின் தொடர்புகளைச் சார்ந்து, ‘திசை திருப்பப்படுவது’ முக்கிய பணிக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து அதன் விளைவுகள் தீர்மானிக்கப்படுகின்றன.

Distracting Quotes:

இழந்த ஆற்றலை திரும்பப்பெற அல்லது வலியிலிருந்து விடுபடுவதற்காக, ஒரு தப்பிக்கும் ஆயுதமாக ‘கவனச்சிதறலை’ பயன்படுத்தலாம். வளர்ச்சிக்கான வழியாக, கடுமையான பணிகளுக்கு நடுவே உடலுக்கும், மனதுக்கும் சிறிது ஓய்வு தேவைப்படும் சந்தர்ப்பங்களில், சமூக வளைதளங்களுக்குள் செல்வது, அல்லது ஹெட்செட்டில் பிடித்த பாடலைக் கேட்பது, யூடியூப்பில் நகைச்சுவை காட்சிகளைப் பார்ப்பது என ‘கவனச்சிதறல்’ இருக்கலாம். இந்த ‘கவனத்திருப்பம்’ மூளைக்கும், உடலுக்கும் ஓய்வைத்தரக்கூடியது. உங்களுடைய கற்பனைத்திறனை வளர்ப்பதாகவும், புதுப்புது சிந்தனைகளை தோற்றுவிக்கும் நேர்மறையான விளைவுகைள ஏற்படுத்தக்கூடியது.

அதே வேளையில், ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் இருக்கும்போதோ அல்லது நண்பன் புதுமையான தொழில் யுத்தியை சொல்லிக் கொண்டிருக்கும் வேளைகளில், உங்களுடைய ஒருமித்த கவனம் அவசியம். அந்த நேரங்களில், மொபைலில் வரும் அறிவிப்புகளை சரிபார்ப்பது, வாட்சப் மெஸேஜ் அனுப்புவது போன்ற நடவடிக்கைகள் எதிர்மறை விளைவை ஏற்படுத்தக்கூடியவை. எதிர்கால வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பவை. மேலும், மனதை அலைபாய வைக்கும் ‘கவனச்சிதறல்’ மிக ஆபத்தானது. உதாரணமாக கைப்பேசியில் ‘இமெயில் (Email)’ ‘ஃபேஸ்புக் (Facebook)’ என ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களை உபயோகிப்பது, டி.வி பார்த்துக் கொண்டே படிப்பது போன்றவை எதிர்மறையான விஷயங்கள்.

அதேவேளையில், ‘உங்கள் மனம் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல், அங்கும் இங்குமாக அலைந்து கொண்டு, எதையுமே செய்ய முடியாமல் தவிக்கும் பதட்டமான மனநிலையில் இருக்கும்போது உங்களால் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. அப்போது ‘கவனச்சிதறலை’ புது வழிகளைத் தேடுவதற்கான ஒரு கதவாக பயன்படுத்திக்கொள்ளலாமே.  இதுபோன்ற இக்கட்டான சூழலில் கவனத்தை திசைதிருப்ப வேண்டியது கட்டாயமானதும் கூட. உளவியலாளர் சங்கத்தின் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், ‘அலைபாயும் மனநிலையானது எவ்வாறு பணியில் கவனம் மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டு உள்ளிட்ட அறிவாற்றல் செயல்முறைகளோடு, தொடர்பு கொண்டுள்ளது’ என்பதை விளக்கப்பட்டுள்ளது.

“எப்போது நம் மனம் அலைபாயும் நிலையில் இருக்கிறதோ, உடனடியாக நம் மூளைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அப்போதுதான் நல்ல விஷயங்கள் நடக்கும்” என்பதை நரம்பியல் நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள். “மூளைக்கு ஓய்வு என்றால் எதையும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருப்பது அல்ல. அது உடலுக்கான ஓய்வு. நம் கவனத்தை வேறொன்றின் மீது திசைதிருப்புவதே மூளைக்கான ஓய்வு” என்கிறார்கள்” ஆய்வாளர்கள்.

பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):
பிற காணொளிகள் (Other Videos):
Distraction in Tamil:

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

 


0 Comments

Your email address will not be published. Required fields are marked *