Ads Top

TNPSC CURRENT AFFAIRS IMPORTANT EVENTS IN TAMILNADU - PART 1

 


சென்னை ஐஐடியில் 'அனைவருக்கும் ஐஐடிஎம்' திட்டத்தில் 1 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு செய்முறை பெட்டகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டமானது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சரால் 5.1.2023 அன்று சென்னை ஐஐடி வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டு அன்று முதல் 8.2.2023 வரை 6 கட்டங்களாக 250 பள்ளிகளை சேர்ந்த 500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளை சேர்ந்த சுமார் 250 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு வார காலம் சென்னை ஐஐடியில் அடிப்படை கணிதம் மற்றும் அறிவியல் குறித்த உண்டு உறைவிட பயிற்சியும் அளிக்கப்பட்டது.
  • சென்னை ஐஐடி வாயிலாக 250 அரசு பள்ளிகளை சேர்ந்த 500 அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் வாயிலாக 1 லட்சம் மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் தயாரிக்கப்பட்ட மின்னணு செய்முறை பெட்டகங்களை அப்பள்ளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் வழங்கினார். 
  • அப்போது, சென்னை-ஐஐடிக்கும் பள்ளிக்கல்வி துறைக்கும் இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • இதன்மூலம், 250 அரசு பள்ளிகளின் 1 லட்சம் மாணவர்கள் மின்னணு சார்ந்த செய்முறை பயிற்சி பெற்று பயன்பெறுவார்கள்.
  • இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, 'தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு' என்ற புதிய திட்டத்தையும் முதல்வர் அறிவித்தார். 

8 இடங்களில் அகழாய்வு பணிகள் - கீழடி புனை மெய்யாக்க செயலி அறிமுகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

  • தமிழகம் 15 லட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்றுத் தொன்மை கொண்ட நிலப்பரப்பாகும். இதன் தொன்மையைக் கண்டறிய, முறையான அகழாய்வுகள் அவசியம்.
  • தமிழக அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழக வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது.
  • அண்மைக்கால தொல்லியல் சாதனைகள் மூலம் நமது புகழ்பெற்ற, நீண்ட வரலாற்றில் காணும் பண்பாடு மற்றும் காலவரிசை இடைவெளிகளை நிரப்புவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.
  • நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி, வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், வரலாற்றுக் காலம் வரையிலான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • அதன்படி, இந்த ஆண்டில், சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள அகரம், கொந்தகையில் உள்ள தொல்லியல் தளங்களில் 9-ம் கட்ட ஆய்வு, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் 3-ம் கட்டம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 2-ம் கட்டம், திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் 2-ம் கட்டம், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் முதல்கட்டம், புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் முதல் கட்டம், தருமபுரி மாவட்டம் பூதிநத்தத்தில் முதல் கட்டம், திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப்பெரும்புதூரில் 3-ம் கட்டமாக ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன.
  • இந்தப் பணிகளுக்காக பட்ஜெட்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.
  • மேலும், கீழடி அருங்காட்சியகத்துக்காக கீழடி புனை மெய்யாக்க செயலியை (Keeladi Augment Reality App) தமிழக தொல்லியல் துறை உருவாக்கியுள்ளது. கீழடி அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்டுள்ள 200 தொல்பொருட்களை புனை மெய்யாக்கம் மற்றும் முப்பரிமாணத்தில் பார்க்கலாம். 
  • கலைப் பொருட்கள் பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். இந்த செயலியையும் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். பார்வையாளர்கள் தங்களின் செல்போன் வாயிலாகவே, அகழாய்வுக் குழி மற்றும் தொல்பொருட்களைப் பார்வையிடும் வசதி செய்யப்பட்டுள்ளது.

1260 கோடியில் சென்னை விமான முனையம் - பிரதமர் திறந்து வைத்தார்

  • சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள, புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி திறந்துவைத்தார். 
  • உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம் மூலம், சென்னை விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் 2.3 கோடியில் இருந்து, 3 கோடியாக உயர்ந்துள்ளது. 
  • விமான நிலையத்தில் உள்ள வசதிகளை, அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கினர். இந்த நிகழ்வில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
  • சென்னை விமான நிலையத்தில், தமிழகத்தின் முக்கிய கோயில்கள், கலைகளின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை ஓவியங்கள், காஞ்சிபுரம் சேலைகள் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
  • இவற்றையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் மாலையில் நடந்த விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
  • மதுரை தல்லாகுளம் - செட்டிகுளம் இடையே ரூ.851 கோடி மதிப்பில் 7.3 கி.மீ. தொலைவிலான 4 வழி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம், ரூ.528 கோடியில் மதுரை நத்தம் - துவரங்குறிச்சி இடையிலான 24 கி.மீ. நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைத்தார். 
  • மேலும், ரூ.1,077 கோடியில் திருமங்கலம் - வடுகபட்டி இடையிலான 36 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலை, ரூ.1,328 கோடியில் வடுகபட்டி - தெற்குவெங்கநல்லூர் இடையிலான 35.6 கி.மீ. நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரூ.294 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதை, தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்தது

  • கடந்த வருடம் அக்.19 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் 131 நாட்களுக்கு பின் கடந்த மார்ச் 6 ஆம் தேதி தமிழக அரசுக்கு மீண்டும் ஆளுநர் அனுப்பி வைத்திருந்தார்.
  • இதனைத்தொடர்ந்து மீண்டும் இந்த தடைச் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு மார்ச் 24 ஆம் தேதி முறைப்படி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 
  • இந்நிலையில் இரண்டாம் முறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாலையில் ஒப்புதல் அளித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த ஆளுநருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் - பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் ஆதரவு 144; எதிர்ப்பு 2

  • தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். ஆளுநருக்கு அறிவுறுத்தும் வகையிலும் ஆளுநர் செயல்பாடு குறித்து விவாதிக்கவும் ஒரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டுமானால் பேரவை விதிகளில் சில விலக்குகளை (தளர்வு) கொண்டுவரவேண்டும்.
  • அதன்படி பேரவை முன்னவர் துரைமுருகன் நேற்று ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதில், சட்டப் பேரவை விதி 92(7)ல் அடங்கியுள்ள 'ஆளுநரின் நடத்தை குறித்து' என்ற சொற்றொடர், விவாதத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ஆளுநரின் பெயரை பயன்படுத்துவது என்ற சொற்றொடர் மற்றும் விதி 287-ல் அடங்கிய 92(7) ஆகியவற்றின் பயன்பாடுகளை நிறுத்தி வைத்து அரசினர் தனித்தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி தீர்மானத்தை முன்மொழிந்தார். 
  • அந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமானால் பேரவை உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தரவேண்டும்.
  • அதன்பின்னர் இந்த தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது. தீர்மானத்தை நிறைவேற்ற எண்ணிக்கை முறையை சபாநாயகர் அப்பாவு கொண்டுவந்தார். பேரவையில் மொத்தம் 146 உறுப்பினர்கள் இருந்தனர். அதில், 144 பேர் தீர்மானத்தை ஆதரித்தனர். பாஜ எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மட்டும் எதிர்த்தனர். தீர்மானத்தின் மீது யாரும் நடுநிலை வகிக்கவில்லை.
  • இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் செயல்பாடு குறித்து விவாதிக்கும் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
  • இதையடுத்து, இந்த தீர்மானத்தின் மீது அவை முன்னவர் துரைமுருகன், செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), சிந்தனை செல்வன் (வி.சி.க), ஜவஹீருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) ஆகியோர் ஆதரவு தெரிவித்து பேசினர். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

உடற்பயிற்சி கூடம் உரிமம் உள்ளிட்ட 2 சட்ட திருத்த மசோதா அறிமுகம்

  • சென்னை மாநகர காவல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான மசோதாவை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அதில், 'மக்களின் உடல்நலம், நலவாழ்வை கருத்தில் கொண்டு எளிதாக உடற்பயிற்சி கூடம் தொடங்க வசதியாக, உடற்பயிற்சி கூடங்களுக்கு உரிமம் பெறுவதற்கான தேவை நீக்கப்படும் என்று, கடந்த 2022 மே 5-ம் தேதி திருச்சியில் நடந்த 39வது வர்த்தகர் தின மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 
  • இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சென்னை மாநகர காவல் சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல, மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட தொழிற்சாலைகள் சட்டத்தை, தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை அமைச்சர் சி.வி.கணேசன் முன்மொழிந்தார்.
  • அதற்கான நோக்க காரண விளக்க உரையில், 'நாட்டில் அதிக அளவிலான தொழிற்சாலைகள், தொழிலாளர்களை கொண்டுள்ளது தமிழகம். 
  • எளிதாக பின்பற்றும் வேலைநேரங்களுக்கு சட்டப்பூர்வ வழிவகைகளை உருவாக்குவதால் தொழிலாளர்கள், குறிப்பாக பெண்பணியாளர்களுக்கும், தொழிலகங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் கிடைக்கும் நன்மைகளை மேற்கோள் காட்டி, பல்வேறு தொழிற்சங்கங்கள், தொழில் துறை சங்கங்கள் ஆகியவை வேலைநேர சீர்திருத்தங்களை கொண்டு வர அரசுக்கு விண்ணப்பித்தன. 
  • இதன் அடிப்படையில், கடந்த 1948-ம் ஆண்டு தொழிற்சாலைகள் தொடர்பான மத்திய அரசின் சட்டத்தை மாநிலத்துக்கு பொருந்தும்வகையில் திருத்தம் செய்ய மாநில
  • அரசு முடிவெடுத்துள்ளது' என்று கூறப்பட்டுள்ளது. இந்த 2 மசோதாக்களும் பேரவையின் இறுதிவேலை நாளில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.

No comments:

Powered by Blogger.