மரபியலும் மருந்துகளும் | Tamil Thoughts

மரபியலும் மருந்துகளும்


மரபணு சோதனைகள் இரத்த சொந்தங்களை கண்டறிய பயன்படுகிறது என்பதே நம்மில் பலரும் அறிந்து கொண்டிருக்கிற தகவல். ஆனால், அவை தவிர இவ்வகையான சோதனைகள் மருத்துவ துறையில் பல வழிகளில் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது.

உதாரணமாக, ஒருத்தர் பாரம்பரிய நோய்களை கொண்டிருக்கிறாரா என்பதை, அவரின் மரபணு மாற்றங்களை வைத்து உறுதிப்படுத்திக்கொண்டு, அவற்றுக்கு ஏற்றவாறு மருத்துவ முறைகளையும், வாழ்வியல் முறைகளையும், நோய் வருமுன்போ அல்லது முற்றும்முன்போ பின்பற்றிவருவதால் மிகப்பெரிய நோய் இழப்புகளையும் அதனால் வரும் சமூக பொருளாதார பிரச்சனைகளையும் தவிர்க்கமுடியும். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் குழந்தை பிறந்து 24 -48 மணி நேரத்திற்குள்ளாக 21 வகையான பாரம்பரிய நோய்க்கான மரபணு சோதனைகள் செய்யப்படுகின்றன. மரபணு வித்தியாசம் இருக்கும் பட்சத்தில், அக்குழந்தைகளுக்கு தொடர்ந்து சோதனைகள் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கும் செய்யப்படுகிறது.


சிறந்த உதாரணமாக, Phenylketonuria என்ற பரம்பரை வியாதியினால் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்படுகிறது. காரணம், Phenyalanine என்ற அமினோ அமிலங்களை செரிக்கும் என்சைம் குறைபாடே.

மரபணு சோதனைகளின் மூலம் இவற்றை முன்பே தெரிந்துகொண்டு குறிப்பிட்ட உணவுகளை மட்டும் “Special Diet” உட்க்கொண்டு வருவதனால் நோய் குறைபாட்டை தவிர்க்கமுடியும். அமெரிக்காவில், தோராயமாக $200 பில்லியன் (இந்திய மதிப்பின் படி 20,000 crores) டாலர்ஸ் தேவையில்லாத, சம்பந்தம் இல்லாத மருந்துகளுக்கும், மருத்துவ உதவிகளுக்கும் செலவிடப்படுகின்றது. இதற்கு, மருந்து சார்ந்த தவறுகளும், மருந்துகளினால் வரும் பக்கவிளைவுகளும் உலகின் நான்காவது மரணத்திற்க்கான காரணங்களாக சொல்லப்படுகிறது. எனவே, smart prescribing, personalized medicine என்ற வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அதாவது, ஒரு தையல்க்காரர் ஒரு துணியை ஒவ்வொருவருக்கும் அவரின் உடல்வாகு பொறுத்து தைத்து கொடுக்கிறாரோ, அதுபோல் மருந்தை அவரவரின் மரபணு அமைந்திருக்கும் விதத்தை அடிப்படையாக கொண்டு தருவதால், அம்மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர்த்து, ஒரு குறிப்பிட்ட அளவில் எவ்வளவு பலனை மருந்து தருகின்றது என்பதை அறிந்து ஒரு முறையான மருத்துவத்தை தர இயலும்.


மருந்தின் பலன்களும், பக்கவிளைவுகளும் (Pharma) எவ்வாறு ஒரு மனிதனின் மரபணு (Genetics) மாற்றத்தினால் மாறுபடுகின்றது என்பதை பற்றி அறிய உருவாக்கப்பட்ட புதிய துறையே Pharmacogenetics.

இத்துறை தொடக்க நிலையில் தான் உள்ளது என்றாலும், இதன் பலன்கள் மருத்துவத்துறையில் ஒரு மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று துறை வல்லுநர்களால் நம்பப்படுகிறது.

Clopidogrel என்ற மருந்து இரத்தம் உறையாமல் இருக்க இதய நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இம்மருந்து CYP2C19 என்ற என்ஸைமினால் உருமாறி, ஆற்றல் அடைந்து அதன் பலனை தருகின்றது. ஆனால், இவ்வேன்சைமை உருவாக்கும் மரபணுவில் மாற்றம் இருக்குமேயானால், அவை குறைவாகவோ அல்லது மிக குறைவாகவோ உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனால் இம்மருந்தின் பலன் என்பது என்சைமின் அளவை பொறுத்தே இருக்கும். என்சைம் குறைவாக உற்பத்தி செய்யப்படும் பட்ச்சத்தில், குறைவான அளவே இம்மருந்து ஆற்றல் மிக்க மருந்தாக மாற்றப்படும். ஒரு சாதாரண மனிதனுக்கு 100 மிகி பலனை அளிக்கிறது என்றால், மரபணு வித்தியாசம் உள்ளவர்க்கு, இதே 100 மிகி பலனை அளிக்காது. எனவே எந்த அடிப்படையில் இம்மருந்து கொடுக்கப்பட்டதோ, அது எதிர்பார்த்த பலனை தராமல், சிகிச்சை தோற்றுப்போய்விடுகிறது.


அதேபோல், Stephen Johnson syndrome/ Toxi epidermal Necrosis (SJS/TEN) போன்ற கொடிய தோல் சம்பந்தப்பட்ட பக்க விளைவுகள் சில மருந்துகளினால் ஏற்ப்படுகின்றது. குறிப்பாக, Carbamazepine, Phenytoin போன்ற வலிப்பு நோய்களுக்கு பயன்படுத்தக்கூடிய இம்மருந்துகள் மரணம் வரை கொண்டுசெல்லும். மரபணு வித்தியாசமே இவ்வகையான பக்கவிளைவுகளுக்கு காரணம் என்று அறிந்து அதை நிரூபிக்கவும் செய்திருக்கிறார்கள் தைவான் நாட்டை சேர்ந்த சங் என்ற ஆய்வாளரும் அவரின் குழுவும். இதை, Food drug & Administration (FDA) என்ற உணவு மருத்துவ கட்டுப்பாட்டு நிறுவனம் உறுதி செய்திருக்கின்றது. ஆனாலும், இம்மரபணு வித்தியாசங்கள் ஒவ்வொரு இன மக்களிடையும் வெவ்வேறு, மரபணுவின் மாற்றத்தினால் ஏற்படுகின்றது. குறிப்பாக, HLA B15 02 என்ற மரபணு மத்திய மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றது, அதே பக்கவிளைவுகள் ஐரோப்பியா நாட்டு மக்களிடையே காணப்படும் மற்றுமொரு மரபணு HLA C3101 வித்தியாசத்தினால் ஏற்படுகின்றது. எனவே தான், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் மரபணு சோதனைகள் செய்த பின்னரே, இம்மருந்துகள் தரப்படுகின்றன.


இந்தியாவிலும் இது தொடர்பான பல ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தாலும்,
பெரும்பான்மை ஆய்வுகள் நோய்களுக்கும் மரபியலுக்குமான தொடர்பை தான் அதிகம் parisothikkinra.
மரபணு மாற்றம் அதனால் ஏற்படும் மருந்து சார்ந்த பக்கவிளைவுகளை மற்றும் மருந்தின் பலன் குறைவது அல்லது கூடுவது பற்றிய ஆய்வுகள் இங்கு வெகு குறைவே.

பார்மசி மற்றும் மருந்து சார்ந்து படிப்பவர்களுக்கு, இத்துறையின் ஆராய்ச்சி
மேற்படிப்பு பண்ண விரும்புபவர்களுக்கு, Pharmacogenetics
பல ஆராய்ச்சி கேள்விகளை வைத்துக்கொண்டு இருக்கிறது.

Other Articles

Covid-19 and its story

Corona Outbreak


0 Comments

Your email address will not be published. Required fields are marked *