
சிறு துளிகள் நம்மை நிகழ்காலத்தை விட்டு
இறந்தகாலத்தில் பயணித்திடச்செய்யும் – ஆம்
காலம் இறந்தாலும் இறக்காத நினைவுகள்!
பாதைகளும் பருவங்களும் மாறின!
வாழ்க்கையும் சூழலும் மாறின!
பழக்கமும் பண்பாடும் மாறின!
பதட்டங்களும் பரபரப்பும் கூடின!
இருந்தும் ஒரு இனம் புரியாத வருடல்
நினைவுகள்!
நாம் ரசிக்கின்ற
பசுமையான நினைவுகளுக்கு அஸ்திவாரமே
அனுபவிக்கக் கிடைத்த சூழலும்
கற்றுக்கொடுத்த பெற்றோரும் சுற்றமுமே!
தினசரி பயணத்தில் எதிர்பார்க்காத நேரத்தில்
சற்றென்று ஒலிக்கும் ஒரு பாடல் – நம்மை இழுத்துச்செல்லும்
முதல்முறையாகக் கேட்ட அந்த சூழலிற்கு!
நினைவில் வந்து உலாவும்
அன்று நம்மோடு இருந்த உறவுகள்.
மழைக்காலம் இன்றும்
நினைவுக்குள் நாம் உணர்ந்த
மண் வாசனை, சூடான பலகாரம் ,
மழைநீருக்கு வைக்கப்பட்ட பாத்திரங்கள்.
நின்ற பின்பும்
சொட்டிக்கொண்டிருக்கும் துளிகள்!
பண்டிகை புத்தாடை – இன்றும்
மறக்காத அன்று உடுத்திய
புத்தாடைகளின் நிறம், தோற்றம்
அதை ஆர்வத்தோடு உடுத்திச்சென்று
தோழமைக்குக் காட்டிய காட்சி!
சுவாசத்தில் வருடும் சமையல் வாசனை
ஆண்டுகள் பல கடந்தாலும்
நினைவுக்குள் அம்மாவின் அடுப்பங்கரை!
வாசலில் வண்ணக்கோலம் – பார்க்கின்ற வேளை
முற்றத்தை அலங்கரித்த காலமும்
பிள்ளையார் பிடித்து பூ வைத்த காட்ச்சியும்!
வாகனம் கற்றுக்கொள்ளும்போது
நினைவுக்குள் வந்து செல்லும்
முதலாகக் கற்றுக்கொண்ட வாகனமும்
வீழ்ந்து எழுந்த வேடிக்கைகளும்!
ஜன்னலோர இருக்கைக்கு போட்டிபோட்ட
நினைவுகள் – இன்று புன்னகைப்போம்
நம் குழந்தைகளின் அதே செயலில்!
முற்றத்து காக்கையின் ஒலிக்கு
இன்றும் மறக்கவில்லை – ஆம்
விருந்தாளிகள் வருவார் என்ற கூற்று!
நம் குழந்தைகளின் தினசரி பதிவுகளில்
நண்பன், புத்தகம், படிப்பு, போட்டிகள்…
நம் நினைவில் உதிரும்
பள்ளிப்பருவமும் அற்புதமான நாட்களும்!
வாழ்க்கை என்ற வட்டத்தில் தருணங்கள்
பலவாக மாறுகின்ற போதும் – அந்த
தருணத்தின் உச்சகட்ட அழகே
அதை ரசித்த முதல் அனுபவமே!
கசப்பான நினைவுகள்!
இன்று நம் வாழ்வில், அதுபோன்ற ஒரு நிமிடம்
கடக்கப்போவதில்லை என்று உணர்ந்தாலும்
பிடிவாதமாய் மறவாமல் காக்கப்படும் நினைவுதனை
முயற்சிப்போம் இறந்தகாலத்தோடு புதைத்திட!
காலத்தாலும் அழிக்க முடியாத ஒன்று
ஆரோக்கியமான அழகான தருணங்கள்
அனைத்தையும் ரசிக்கின்ற உணர்வுகள்
அதுவே
நம் குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் அழியா சொத்து.
நல்ல நினைவுகள் என்றும்
நம்மையும் அவர்களையும் காலத்திற்கும் இணைத்திடும்!
இன்றும் சேர்த்துவைப்போம் நல்ல தருணங்களை.
அவை
நாளைய நினைவுகளுக்கான ஏடு.
அழகான நினைவுகள்…
ஆரோக்கியமான புத்துணர்வுகள்!!!
கிருஷ்ண ப்ரியா எம்
0 Comments