ஆல்போல் | Tamil Thoughts

ஆல்போல்


“ஆலப்போல் வேலப்போல், ஆலம்விழுதுபோல் மாமன் நெஞ்சில் நானிருப்பேனே” என்று மீனா பாடிக் கொண்டிருந்தாள், இசையருவியில். என்னவோ தெரியவில்லை, இந்தப்பாடலை கேட்டாலோ பார்த்தாலோ   அதைவிட்டு மனசு அகல மறுத்து அப்படியே ஆணி அடித்தது போல் நின்றுவிடும். முழுப்பாடலும் பார்த்தும், கேட்டும் கழிந்த பிறகு பிள்ளைகள் அம்மா!! பாட்டு முடிஞ்சிருச்சு, மாத்துங்க என்று சொல்வதும் காதில் விழாமல் வயித்து போய்  மனம் இயங்க மறுப்பதுண்டு. அந்த பாடலின் சுவைமிகு இசையா? அல்லது அழகிய காட்சியமைப்பா? என்னவென்று சொல்லத் தெரியவில்லை. இந்த பாடலுக்கு இணையாகவோ அல்லது இதை காட்டிலும் சிறப்பான பாடல்கள் பல இருந்த போதும், மனம் இந்த பாடல் மேல் கொள்ளும் ஈர்ப்புக்கு காரணம் இந்த பாடல், என் நினைவுகளை இட்டுச்செல்லும் காலகட்டம் தான்.

‌அறிவு அண்ணன் இந்த படத்தை பார்த்து விட்டு வந்து, எங்களிடம், விட்ட அலப்பறையும், ஆர்ப்பாட்டமும் தான் எங்களை இப்பாடலுடன் இனைத்து வெகுவாக கவர்ந்தது.

     அப்போது நான் பள்ளி இறுதி   ஆண்டில் படித்துக்கொண்டிருந்தேன். இன்னும் இரண்டு மாதங்களில் பப்ளிக் எக்ஸாம்! தீவிரமாக படித்து கொண்டிருக்கும் சமயம். பப்ளிக் எக்ஸாம் என்னவோ எனக்கு மட்டும் தான் என்றாலும், வீட்டில் எல்லாருக்குமே பரிட்சை என்ற ரீதியில் தான் அப்பாவின் கட்டுப்பாடுகள் இருக்கும். தம்பியும் தங்கையும் முறையே ஆறாம் மற்றும் எட்டாம் வகுப்பே படித்த போதும், அவர்களுக்கும் மிகுந்த கட்டுப்பாடுகள் இருக்கும். மாலை பள்ளியில் இருந்து வந்ததும் அதிக நேரவிரயமின்றி அமர்ந்து படிக்க வேண்டும். மூன்று பேரும் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கத் தடை; குறிப்பாக அம்மா நாங்கள் அமர்ந்து படிக்கும் இடத்தில் இருக்கவே கூடாது.

அம்மாவிற்கு, காலையிலிருந்து வீட்டில் தனித்து இருந்துவிட்ட சூழல் மாறி, மாலையில் சிறிது நேரம் பிள்ளைகளுடன், சிரித்துப் பேசி மகிழவும்  மேலும்  எங்களுடைய பள்ளியில், வகுப்பில் நடந்தவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புவார் . உண்மையில், அது ஒரு சிறந்த தருணமாக இருக்கும். நாங்கள் நால்வரும் மாலை சிற்றுண்டி உட்கொண்டவாரே அம்மாவிடம், கதையளந்துக் கொண்டு இருப்போம்.

‌அப்பா ஹாலில் சோபாவில் அமைந்து தினசரி படித்தபடியே அடிக்கொரு தரம், இன்னும் அரட்டை கச்சேரி முடியலையா? படிக்க உக்காரலையா என்று குரலெழுப்பி கொண்டே இருப்பார்.!!!!

அப்பா, நகரின் புகழ்பெற்ற  பாரத மிகுமின் நிலைய தொழிற்சாலையின் உயர்பதவியில் இருக்கும் பொறியாளர்! மிகுந்த ஈடுபாடும், தொழில் சிரந்தையும் சிந்தனையும் கொண்ட மனிதர். சின்னஞ்சிறு கிராமத்தில், விவசாய குடும்பத்தில் பிறந்து கடினமான சூழ்நிலையிலிருந்து உழைத்து, ஆர்வத்துடன் விருப்பமாக படித்து, இன்று இந்நிலையை அடைந்துள்ளார். அவர் வாழ்க்கை வரலாற்றை பலமுறை கேட்டுக் கேட்டு வளர்ந்துள்ளோம். எங்களுக்கு எந்த ஒரு குறையுமற்ற சிறந்த வாழ்வே அமைந்துள்ளது. ஆனபோதும் அந்த பருவத்திற்கே உரிய எதிர்பார்ப்பு, விளையாட்டுத் தன்மை இதன் பொருட்டு, அப்பாவின் அறிவுரைகள் மற்றும் கெடுபுடி காதிற்கு கசப்பாய் இருக்கும்.

நாங்கள் எங்கள் சிற்றுண்டியுடனான அரட்டை படலத்தை முடித்து படிக்க அமர ஒரு மணி நேரம் செய்து விடுவோம்! அதற்குள் அப்பா ஒரு மூணு நாலு முறை படிக்க உட்காரலையா.. படிக்க உட்காரலையா என்று கேட்டு விடுவார்.

   இப்படியாக எங்கள் அன்றாட வாழ்வு சென்றுக்கொண்டிருக்கும். வாரத்துக்கு ஒரு முறை ஞாயிற்றுக் கிழமைகளில் சுதந்திரமாய் இருப்போம்!!!! (என்னவோ மற்ற நாட்களில் கடுங்காவல் போல்!!!!) எல்லா நாட்களும் இனிமையான நாட்கள் தான் என்றாலும் ஞாயிற்றுகிழமை புத்தகங்களுடன் புலங்க வேண்டும் என்ற அவசியமில்லை. அப்பா ஞாயிறு அன்று எங்களை படிங்க என்று சொல்லவே மாட்டார்.

 காலை எழுந்தது முதல் மாலை வரை ஒரே குதியாட்டம் தான்! அப்பா அதிகாலையே எழுந்து கறி வாங்கி வர சென்று விடுவார். பின் வந்ததும் ஸ்கூட்டர், கார் எல்லாம் தம்பி தங்கையின் ஒத்தாசையுடன் கழுவுவார்.

நானும் அம்மாவும் சேர்ந்து சமைத்து முடிப்போம். (என்னை ஆறாம் வகுப்பிலிருந்து அம்மா தனக்கு ஒத்தாசையாக இருக்க வைத்து விடுவார்.) பின்னர் அனைவரும், குளித்து முடித்து உணவருந்தி முடித்தது முதல் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்தால், இரவு கடைசி நிகழ்ச்சியான Sithartha Basu வின் Quiz program முடியும் வரை அமர்ந்த இடம் விட்டு அகல மாட்டோம்.

      அந்த நாட்களில் இன்றுள்ளது போல் 24 மணி நேரம் தொலைக்காட்சி சேவை இருக்காது. திங்கள்-வெள்ளி மாலை 5.00 மணிக்கு சேவை தொடங்கி இரவு 10.00 – 11.00 மணிக்கு நிறைவுறும்.  அதுவும் 6.00 – 9.00 மணி மட்டுமே தமிழ் தூர்தர்ஷன். மற்ற நேரங்களில் national program from Delhi Doordarshan நிகழ்ச்சிகள்  Hindi ல் தான் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8.00 மணியிலிருந்து ஒளிபரப்பு ஆரம்பமாகும். 8.00 மணிக்கு சித்ரஹார் என்ற ஒலியும் ஒளியும் நிகழ்ச்சி இருக்கும். அதில் பண் மாநில மொழி பாடல்கள்

ஒலிபரப்பாகும்.  அப்படி ஏதோ ஒரு தருணத்தில் ஒரு தமிழ் பாடல் வரும். அதற்காக காத்து கிடப்போம். பகல் முழுவதும் நிகழ்ச்சிகள் இந்தியில்தான் இருக்கும். இருந்தாலும் பார்க்க அனுமதி இருப்பதால், நாங்கள் அகலாமல் பார்ப்போம்.

    மாலை வேளையில் ஒரு ஹிந்தி படம் வேறு உண்டு. ஒரு சில படங்களையே திரும்பி திரும்பி போட்டுக் கொண்டிருப்பார்கள் ஆனாலும் பார்ப்போம்.

ஏனென்றால் மற்ற நாட்களில் நாங்கள் டிவி பார்ப்பதற்குத் “தடை”. அப்பா எங்களை பார்க்க அனுமதித்ததே இல்லை. மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை  தமிழ் நிகழ்ச்சிகள் வரும் நேரத்தில் தான் மும்முரமாக நாங்கள் படித்துக் கொண்டிருக்கும் (படித்துக் கொண்டிருப்பதாக அப்பா, நினைத்துக் கொண்டிருக்கும்) நேரம். நல்ல பல நாடகங்கள், நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்புகிறார்கள் என்று எங்களது வகுப்பு நண்பர்கள்  கூறுவதுண்டு. நாங்கள் ஒருபோதும் அவற்றை கண்டதில்லை. மிகுந்த வருத்தமாக இருக்கும். ஆனாலும் அப்பாவிடம் அனுமதி வாங்க பயம்.

அந்த நாட்களில் 6.00 மணி முதல் 9.00 மணி வரை தமிழ் நிகழ்ச்சிகளில் செவ்வாய் மாலை 1 மணி நேர நாடகம் ஒன்றும் வெள்ளிகிழமை  8.00  மணிக்கு ஒளியும் ஒலியும் ஒளிபரப்புவார்கள். இந்நிகழ்ச்சிகளை பார்க்க விரும்பும் நாட்களில் நாங்கள் ஒரு சின்ன திட்டம் போடுவோம். பெரும்பாலும் அத்திட்டம் எதிர்பார்த்த பலனை அளிக்காது அல்லது தோல்வி அடையும். ஆனாலும் நாங்கள் தளராமல் முயல்வோம். அம்மாதிரியான  நாட்களில் மாலை, பள்ளியில் இருந்து வந்ததும் சிற்றுண்டி நேரத்தைத் தவிர்த்து, படிக்க அமர்ந்து விடுவோம். அப்பா வந்து, என்னம்மா ஏதும் சாப்பிடலையா? ஏன் உடனே படிக்க  உட்காந்துட்டிங்க? நிறைய வீட்டு பாடமா?. என்ன ஏது என்று கரிசனமாக தன்மையாக கேட்டால், “இல்லப்பா, நாங்க சீக்கிரமா  படித்துவிட்டு, ஒரே பொழுதுதாக இரவு உணவு உட்கொண்டு விடுகிறோம்” என்று சொல்லிவிடுவோம். அப்பா பெருமையாக நினைத்துக் கொண்டு very good என்று சொல்லி சென்று விடுவார். இந்த திட்டத்தின் ஆழ்ந்த நோக்கமானது அப்பாவின் நன்மதிப்பை பெறுவது, மற்றும், அதன் காரணமாக இரவு உணவு சமயம், TV போடுவார்!.

     அப்படியே சாப்பிட்டுக்கொண்டே நிகழ்ச்சியை பார்க்கலாம் என்பதால்தான். எப்போதாவது ஒரு சில சமயம் தான், திட்டத்தின் பலனை நாங்கள் அனுபவிக்க இயலும். பல சமயங்களில், பல்பு தான். ஏனென்றால் நாங்கள் பார்க்க அமரும் சமயம், போரான மறுஒளிபரப்பு நாடகங்களே அரங்கேறும், அல்லது உணவு அருந்தி முடிந்தால், அப்பா பாதியிலே TV யை Off பண்ணிவிடுவார். இப்படி பாதியில் மட்டும் பார்ப்பது இன்னும் கொடுமை. எனவே ஒவ்வொரு அரிசியாக உண்டலும் அப்பா சத்தமிடுவார் அல்லது டிவியையே பார்த்து ஆ…! என்று சாப்பிட மறந்து வாய நிறந்து பார்க்கும் தங்கையின் பொருட்டு டிவி அனைக்கப்படும்.

எனவே எங்களது தொலைக்காட்சி அனுபவம் மிகவும் பரிதாபத்திற்குரியதகவே கழிந்தது. வகுப்பில் நண்பர்களிடம் வாய்மொழியாகவே நாங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டோம்! வீட்டில் பேருக்கு தான் டிவி இருப்பதாகவும், அப்பா பார்க்க அனுமதிக்காததை குறித்தும் அம்மாவிடம் முறையிடுவோம், பயனற்ற சண்டையிடுவோம்!!!

     அந்நாட்களில், எங்களது மாடிப் பகுதியில் குடியிருந்த குடும்பமே அறிவு அண்ணன் குடும்பம்! அறிவு அண்ணன் ஒரு தொழிற்சாலையில் மெக்கானிக் ஆக பணியாற்றி வந்தார். அவருக்கு அன்பு, அருள் என்ற அண்ணன்களும் அமுது என்ற தம்பியும் இருந்தனர். அவர்களின் பெற்றோர் கமலா பாட்டி மற்றும் நடராஜ் தாத்தா. முடி வெளுத்து இருந்தாலே தாத்தா பாட்டி என்று அழைக்கும் பழக்கம் எனக்கு சிறுவயது முதல் இருந்தாம். அம்மா சொல்லுவாங்க. நான் எவரை எவ்வாறு அழைக்கிறேனோ, அவ்வாறே தம்பியும், தங்கையும் அழைக்கும் வழக்கம் இருந்ததால் அவர்களை தாத்தா பாட்டி என்றும், அவர்களின் பிள்ளைகளை அண்ணா என்றும் அழைத்து ஒரு விநோத உறவு முறையை வளர்த்து வந்தோம். யாரையுமே, ஒரு உறவுமுறை வைத்து சொல்லி அழைக்க கற்றுத் தந்துவிட்டார்கள், அம்மாவும், அப்பாவும். அதையே தான் நான் இன்றளவும் கடைப்பிடிக்கிறேன்.

கமலா பாட்டி குடும்பத்தினருடன் நம் குடும்பம் இரண்டர கலந்து இனிமையாக காலங்கள் சென்றன. பள்ளி நண்பர்கள் மூலமே அறிந்து வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இப்போது கமலா பாட்டி மற்றும் அறிவு அண்ணன் மூலமாகவும் அறிந்து கொண்டோம். மூத்த அண்ணன் அன்பு திருமணமாகி, வட இந்தியாவில் ரயில்வேயில் பணியாற்றி வந்தார். அருள் அண்ணாவும் திருமணமாகி ஓசூரில் Travels வைத்திருந்தார். இரு அண்ணன்களின் திருமணமும் நெடு நாட்கள் தாமதமாகி எங்கள் மாடி வீட்டுக்கு வந்துதான் கை கூடியது  என்று கமலா பாட்டி அடிக்கடி சொல்லி மகிழ்வார்கள். எங்கள் வீட்டு வாசலில் பெரிய பந்தல் அமைத்து அண்ணன்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அப்பா, அந்த இரு திருமண தருணங்களையுமே எங்கள் வீட்டு நிகழ்ச்சியாக கருதி, அவர்களுக்கு ஒத்தாசை செய்துக்  கொண்டிருந்தார். நாங்கள் அவ்வாறே!

       அறிவு அண்ணன் ஓய்வாக இருக்கும் ஒரு நாள், சனிக்கிழமை தான். அன்று ஒரு நாள் வீட்டிலேயே இருந்து ஓய்வெடுக்கும், அல்லது நல்ல சினிமாவுக்கு சென்று வந்து எங்களிடம் சொல்லும். அப்பா வீட்டில் இருந்தால் அப்பாவிடம் பொதுவான விஷயங்களைப் பேசும்.  மற்றபடி எங்களோடு சினிமா, டிவி பற்றி பேசும்.

       சனிக்கிழமைகளில் நாங்கள், அறிவு அண்ணன், அம்மா, கமலா பாட்டி, அனைவரும் எங்கள் வீட்டு முற்றத்தில் உள்ள திண்ணையில் அமர்ந்து கதைப்போம்.

       அறிவு அண்ணன், தான் பார்த்த படங்களைப் பற்றியும், எங்களிடம் விவரிக்கும். TVயே  பார்க்காத  எங்களுக்கு தியேட்டர் சென்று படம் பார்ப்பது எல்லாம் நினைத்து கூட பார்க்க இயலாத ஒன்று.    அறிவு அண்ணன் கூறுவதை ஆவலாய் கேட்ப்போம். அந்தத் தருணங்களில் ஒன்று தான், அறிவு அண்ணன், எஜமான் படம் பார்த்துவிட்டு வந்து எங்களை திகைக்க வைத்துக் கொண்டிருந்தது.

“மீனா ஒரு ஆளுக்கே டிக்கட் காசு சரியா போகும்  பாத்துக்கங்க”, *அவ்வளவு அழகு”,அது இது என்று அனைத்தும்! ஒரு புறம், பொறாமையாக இருந்தாலும், நாம ஒரு முறை அந்த படத்துல வரும்  ஒரு பாட்டையாச்சும் பாக்கணும்னு மனசு துடிக்கும்.

எங்க வீட்டை பொருத்த வரை பாட்டு கேட்பது என்பது,  மூச்சு விடுவது போல்! அதும் அப்பா அலுவலகம் சென்ற பின் விடும் மூச்சு!  எந்த நேரமும் ரேடியோல பாட்டு ஓடிக் கொண்டேதான் இருக்கும். பாட்டு கேட்டுக்கொண்டு தான் எப்போதும் எந்த வேலையும் நடக்கும். ரேடியோவில் நிகழ்ச்சிகள் இல்லாதபோது  Tape Records/player – ல் Cassette  போட்ட பாட்டு கேட்போம்!  எப்போதாவது எங்கள் அண்ணன் (பெரியப்பா மகன்) Cassette record செய்து கொண்டு வந்து தருவார். நான் என் வகுப்புத் தோழிகளிடம் அவ்வப்போது சில Cassette வாங்கி வந்து  போட்டு கோட்போம். எங்கள் பள்ளிக்கு நாங்கள் செல்லும் சமயம் போருந்தில், புதுப்பட பாடல்களை போடுவார்கள். என் வகுப்பு தோழன் பிரேம் என்பவன், fancy Store மற்றும் Cassette கடை வைத்திருந்தார்கள். எனவே அவன் அந்த சமயம் வெளியாகும் புது பட பாடல்கள் Cassette – ஐ Bus ல் போடுவான். ஒரு மணி நேர பேருந்து பயணம் பள்ளிக்கும் வீட்டுக்கும் காலை மாலை இருவேளைகலிலும்  எங்களை பாடல்கள் ஆக்கிரமிக்கும். அந்த நாட்கள் என்றும் மறவாத நாட்கள்.

எனவே எஜமான் பட பாடல்கள் அனைத்தும் எங்களுக்கு அத்துபடி. காட்சிகள் தான் காண கிடைக்காமல் இருந்தோம்.

     வெள்ளிக் கிழமைகளில் ஒளிபரப்பப்படும் தமிழ் நிகழ்ச்சிகளில், 8.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும்  ஒலியும் ஒளியும்  நிகழ்ச்சியில் சமிபமாக வெளிவந்த புதுப்பட பாடல்களை ஒளிபரப்புவார்கள். ஆனால், அதை நாங்கள் பார்க்க முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி! நான் ஏற்கனவே சொன்னதுபோல எங்கள் திட்டம் பல நாட்கள், நினைத்து போல் பலன் அளிப்பதில்லை. எனவே, இம்முறை வேறு திட்டம். இத்திட்டத்தை அறிவு அண்ணா  மூலம் நிறைவேற்ற முடிவு எடுத்தோம். அதன்படி சரியாக ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி நடக்கும் சமயம், எங்கள் வீட்டுக்கு வர வேண்டியது. அண்ணன் அப்படி அப்பாவிடம் வந்து சிறிது நேரம் பேசி செல்வது வழக்கம் தான். அப்படி வரும் வேளையில் நாங்கள் மிக தீவிரமாக படித்துக் கொண்டிருந்தால், அப்பா, அண்ணனை அழைத்து கொண்டு வீட்டுக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருப்பார் அல்லது சில சமயம் வீட்டிலேயே அமர்ந்து பேசுவது வழக்கம். இந்த ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு எங்கள் திட்டம் உருவானது. சரியாக ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி தொடங்கும் சமயம் அறிவு அண்ணா வரவேண்டியது, அப்பாவை அழைத்துக் கொண்டு புறத்தே  செல்ல வேண்டியது அந்த நேரத்தைப் பயன்படுத்தி நாங்கள் ஒரு 10-15 நிமிடம் ஒலியும் ஒளியும் பார்க்க வேண்டியது! எங்கள் நேரம் நல்ல நேரமாக இருந்தால், கைகூடி வரும், அந்த சமயம் எஜமான் பாட்டு வந்து விடும்.

    ம்ம்ம்!!!

இப்போது நான் சொல்லவும் தான்  வேண்டுமோ அன்று எங்களின் திட்டம் செவ்வனே நிறைவேறியதும் என்றும், அந்த எஜமான் பட பாடல் அன்று ஒளிபரப்பானது “ஆலப்போல் வேலை போல் என்றும்????

     அந்த நாட்களின் நிகழ்வுகள் அன்று ஏற்க கடினமாக இருந்த போதிலும் அன்றைய நினைவுகள் ஆல் போல் வேறுண்றி இன்றும் மனதை விட்டு அகலாமல், ஆனந்தத்தை அள்ளி அள்ளி இறைக்கிறதே!!!!


0 Comments

Your email address will not be published. Required fields are marked *